Sunday 10 April 2016

Financial Freedom Introduction Post No:1 (Tamil)

Financial Freedom (Financial Well-being)

நிதி சுதந்திரம்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

       பொருள் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்பது உலக பொதுமறை.  வாழ்க்கைக்கும் வாழ்க்கையில்  மகிழ்ச்சிக்கும்; பொருள் அல்லது பணம் தான் ஆதாரமே.  அதனால்தான் ஆதாரம் (பொருளாதாரம்) வலுவாக இல்லாதோர் வாழ்க்கை நரகமாகிவிடுகின்றது. இந்த ஆதாரத்திற்காகவே நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டு உள்ளோம். ஓரு வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ ஈடுபட்டு ஒவ்வொருநாளும் பணத்தை தேடுகின்றோம். இதில் பலரும் தமது வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று தெரியாததாலும், மற்றவருடன் உள்ள போட்டி மனப்பான்மையாலும் பணத்தை மட்டும் தொடர்ந்து தேடிக்கொண்டே உள்ளனர்.

        இவை எல்லாமே வாழ்வதற்காகதான் என்று  சொல்லிக்கொண்டு நாம் தேடும் இந்த பணத்திற்காக நம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுகின்றோம்.  உதாரணமாக ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக் கொண்டால் அவர் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை வேலைக்காகவே செலவிடுகின்றார் (10, 12 மணிநேர வேலை செய்பவர்கள் நிலை என்ன?...). இதில் தூக்கத்திற்கு ஒரு பங்கு (8 மணி நேரம்) செலவிடுகின்றார். மீதம் உள்ள சில மணிநேரமும் அந்த வேலை அல்லது வியாபாரம் பற்றிய அல்லது தங்கள் பொருளாதார நிலைப்பற்றிய சிந்தனை அல்லது செயலாகவே உள்ளது.

     விக்கி ராபின் மற்றும் ஜோ டொமின்கஸ் (Vicki Robin and Joe Dominguez) என்ற இருவரும் உங்கள் பணம் அல்லது உங்கள் வாழ்க்கை(Your Money 0r Your life) என்ற தங்கள் புத்தகத்தில்  உங்களுக்கு எது வேண்டும் பணமா? அல்லது வாழ்க்கையா?” என்று கேட்கின்றார்கள்.  உங்களுக்கு  எது வேண்டும்இரண்டும் வேண்டும் என்பதுதான் என் பதிலும். இருந்தாலும் வாழ்க்கைதான் முக்கியம் தினம் தினம் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போது மக்களுக்கு இது தெரியவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. வாழ்க்கையில் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம். ஆனால் எவ்வளவு பொருள் அல்லது பணம் கொடுத்தாலும் வாழ்க்கையையோ அல்லது உயிரையோ வாங்க முடியாது. ஆதலால் வாழ்க்கைக்கே முதலிடம். வாழ்வதற்குத்தான் பொருள் வேண்டும் (வாழ்வதிலும் பொருள் வேண்டும்).

               “சேமிப்பு என்பது சிறந்த பழக்கம் ஆனால் அதுவே அதிர்ஷ்டம் அந்த பழக்கம் நம் பெற்றோரிடம் இருந்தால்என்று வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) குறிப்பிடும் அந்த அதிர்ஷ்டம் நம்மில் பலருக்கு இல்லை. அதிர்ஷ்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் நாம் ஒரு வேலை அல்லது வியாபாரத்தில் ஈடுபடுகின்றோம்.  இதுவரை சரி ஆனால் எவ்வளவு நாள் இந்த வேலையை நாம் செய்யப்போகின்றோம்? அறுபது வயது வரையா? இல்லை அதற்கு மேலுமா? எவ்வளவு நாள் நாம் வேலை செய்யப்போகின்றோம் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? வேலைத்தேடும் போது நிரந்தர வேலையாக நாம் தேடினாலும் பலருக்கு நிரந்தரமாக வேலைச்செய்ய விருப்பமில்லை. இருந்தும் என்றாவது ஒரு நாள் ஓய்வு வரும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டுள்ளோம்.

        தஞ்சையில் பணிபுரியும் ஒர் வங்கி ஊழியரை எனக்கு தெரியும். அவர் ஒருமுறை கூறியதாவது என் ஓய்வுதிய பணம் எல்லாம் நான் வாங்கியுள்ள வீட்டு கடனுக்கே சரியாக இருக்கும் அதனால் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஒரு வேலையை தேடியாக வேண்டும்என்றார். அவர் மட்டுமில்லை அறுபது வயதை கடந்தும் வேலை செய்யும் பலரை நாம் பார்க்கலாம். இது போன்று வேலை செய்பவர்களில் பணத்திற்காக என்பதையும் தாண்டி நாற்பது வருடகால வாழ்க்கைமுறையின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனோநிலை பலரிடம் உள்ளது. ஏன் இந்த நிலை?

         எட்டு மணி நேர வேலையை வெறுத்தோ அல்லது பொதுவாகவே வியாபாரத்திற்கு வரும் பலரும் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை வியாபாரம் என்பது நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிய பல பொறுப்புகளைக் கொண்டது”. என் நண்பனின் அப்பா ஒரு மளிகைக் கடை வைத்திருக்கின்றார். உணவு அல்லது வேறு வேலைக்காக ஓரிரு மணி நேரம் தவிர காலை ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரை அந்த கடையிலேயே அவர் நேரத்தை செலவிடுவார். தொடர்ந்து நின்று கொண்டு இருப்பதால் கால் வலி, உடல் நோவு என பல பிரச்சனைகளை அவர் சந்தித்தாலும் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. சிறிய கடை என்றாலும் பெரிய கடை என்றாலும் நேரமும் நோயும் ஒரு பொருட்டே இல்லை. இது போன்ற நிலையை நாம் பலரிடம் பார்க்கின்றோம். ஏன் இந்த நிலை?

        இன்னும் பலரும் எதாவது ஒரு வேலை, ஒரு தொழில் அல்லது ஒரு வியாபாரம் என ஈடுபட்டு பணத்தை ஈட்டினாலும் வாழ்க்கைக்கு அவசியமான ஆரோக்கியம், மன அமைதி, உறவுகள், சில நேரம் வாழ்க்கையையும் உயிரையும் கூட இழக்கின்றார்கள். வேலைக்கு செல்வதையோ, வியாபாரம் செய்வதையோ அல்லது பொருள் ஈட்டுவதைப் பற்றிய கேள்வி இல்லை இது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை பலருக்கு இல்லாமல் போனதைப் பற்றிதான் இப்போது கேள்வி!

          வயது ஒத்துழைக்காத போதும் சில நேரம் உடல் அல்லது மனம் ஒத்துழைக்காத போதும் நாம் வேலை செல்ல வேண்டிய அல்லது வியாபாரம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏன் என்றால் நமது வாழ்க்கை அந்த வேலையைச் சார்ந்தே (வருமானம்) உள்ளது. வேலையை நாம் விட்டாலோ அல்லது வேலை நம்மை விட்டுவிட்டாலோ நமது பொருளாதாரம் முக்கியமாக வருமானம் பாதிப்படைகின்றது. நம்மில் பலரின் வாழ்க்கையும் இந்த நிலைதான். இதற்கு நிதிசார் வாழ்க்கை முறை (Financial Dependent) என்று பெயர். இவ்வாழ்க்கை முறைக்கு நேர் எதிரான ஒன்றுதான் நிதி சுதந்திரம் (Financial Freedom) ஆகும்.

          வேலையில்லாதவர்களுக்கு இருக்கும் மன இறுக்கம் ஒரு பக்கம் இருக்க வேலையில் இருப்பவர்கள் சந்திக்கும் மன இறுக்கம் அதிகமாகிக் கொண்டுள்ளது. பிடிக்கவில்லை என்று வேலையை விடுவதும் ஆள் குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதும் எதார்த்தமாக உள்ள இக்காலத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று நிதி சுதந்திரம். தீவிரமான ஒரு வேலையை மட்டும் சார்ந்து இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வாய்ப்புகளை (செலவுகளை விட அதிகமாக) கொண்டுள்ள நிலைக்கு நிதி சுதந்திரம் என்பர். இப்படியும் வாழ முடியுமா? முடியும். யார் வேண்டுமானலும் நிதி சுதந்திரத்துடன் வாழலாம். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்…. (தொடரும்).

Saturday 9 April 2016

Financial Freedom Introduction Post No: 2 (Tamil)

Financial Freedom (Financial Well-being)
                                    நிதி சுதந்திரம்           

              இப்போது நீங்கள் ஈடுபட்டுள்ள வேலை அல்லது தொழிலை விட்டுவிட்டு இப்போது வாழ்வதுபோல் வாழ்நாள் முழுவதும் உங்களால் வாழமுடியுமானால் நீங்கள்தான் பணக்காரன்என்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki) நிதி சுதந்திரமான வாழ்க்கையை ஒரு பணக்கார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு பணக்காரன் என்பது ஹென்றி ஜேம்ஸ் (Henry James) குறிப்பிடும் பணக்காரன் அதாவது தங்கள் கற்ப்பனை செய்த வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்தையும் பெற்றிருப்பவர்என்று அர்த்தம்.

                உங்கள் வாழ்க்கையை முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு நீங்கள் இந்தியாவின் முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராக வேண்டிய அவசியமில்லை. ஏன்! உள்ளுரிலும் ஒரு பெரும் பணக்காரனாக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு தீவிரமான வேலை அல்லது தொழிலைச் சார்ந்து இல்லாமல் உங்கள் செலவுக்கு அதிகமான வருமான வாய்ப்பை பெற்றிருந்தால், அது போதும் அதுதான் நிதி சுதந்திரமாகும். உதாரணமாக உங்கள் ஆண்டுச் செலவு மூன்று இலட்சம் என்று வைத்துக்கொள்வோம். மூன்று இலட்சம் தாண்டி வருமானம் தரக்கூடிய சொத்துகள் (Assets) அல்லது செயலற்ற வருமானம் (Passive Income)) உங்களிடம் இருந்து தீவிரமான வேலை அதாவது உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது உங்கள் நேரத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் வேலையில் நீங்கள் ஈடுபடாமல் இருந்தால் அதுதான் நிதி சுதந்திரம்.

                                இந்த கதையை கேளுங்கள் ராமுவும் சோமுவும் நண்பர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள ஓர் சிறிய கிராமத்தில் வாழ்ந்தனர். மிகவும் உழைப்பாளிகளான அவ்விரு இளைஞர்களுக்கும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கனவுகள் இருந்தன (அப்படி வாழ வேண்டும்! இப்படி வாழ வேண்டும்! என்று நம்மைப் போலதான்). அந்த கிராமத்து மக்களுக்கு தேவையான குடிநீர் மலையின் உச்சியில் உள்ள ஒரு ஊற்றை சார்ந்து இருந்தது. தினமும் மக்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருவது அந்த இரு நண்பர்களின் வேலை. ஒவ்வொருவரும் தலா 500 லிட்டர் வீதம் எடுத்து வந்து லிட்டர் 50 பைசா வீதம் விற்று பணம் ஈட்டிவந்தனர்.
                             
                       கனவுகளை நிறைய சுமந்துக் கொண்டிருந்ததால், நாட்கள் செல்ல செல்ல ராமுவுக்கும் சோமுவுக்கும் சோர்வு ஏற்பட்டது. நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்தப் பணம் அன்றாட செலவுகளுக்கே சரியாக இருந்தது. இருவருக்குமே தங்கள் செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். உடனே ராமு அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துக்கொண்டான். தினமும் 700 லிட்டர் தண்ணீரை எடுத்து வந்து மக்களிடம் கொடுத்துப் பணம் பெற்றான். மக்கள் ராமுவின் உழைப்பை பாராட்டினார்கள் அவனுக்கு அது மகிழ்ச்சியை கொடுக்கவே அவன் தொடர்ந்து செய்தான். ஆனால் சோமு சற்று வித்தியாசமாக சிந்தனைச் செய்தான் மலையிலிருந்து கிராமத்திற்கு ஒரு குழாய் வழியாக நீரை கொண்டுவருவது தான் அவனுடைய திட்டம். சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் சேமித்து அதற்கான பொருள்களை வாங்கினான் பிறகு நாளொன்றுக்கு 500 லிட்டருக்கு பதில் 300 லிட்டர் தண்ணீரை மட்டுமே எடுத்துவந்தான். தண்ணீர் எடுத்துவந்த நேரம் போக மீதமுள்ள நேரத்தை எல்லாம் குழாய் அமைப்பதில் செலவிட்டான்.

                                ராமுவுக்கு இணையாக சோமு உழைத்த போதும் ஊர் மக்கள் சோமுவைப் பார்த்து நகைத்தனர். பிறகு அவனுக்கு புத்திமதியும் சொல்ல ஆரம்பித்தனர் ராமுவைப்பார் நன்றாக உழைக்கின்றான் அதுபோல் நீயும் செய்தால் என்ன?, இளமை இருக்கும் போதே நிறைய பணம் சம்பாதிக்கும் வழியைப்பார், நீ செய்வது வீண் வேலை, சொல்வதை கேள்.என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சொல்லிக் கொண்டே சென்றனர். சோமு இதையெல்லாம் காதில் வாங்குவதாகவுமில்லை, தன் நோக்கத்தை மாற்றுவதாகவுமில்லை. நாட்கள் வேகமாக நகர்ந்தது ராமு அதிகமாக தண்ணீர் எடுத்துவந்து சம்பாதித்த பணத்தை சேமித்தான் பிறகு சேமித்த பணத்தைக் கொண்டு சில பொருள்களை வாங்கினான். ஆனால் சோமுவின் வேலை வெகுவாக முடிவுற்றது. இப்போது அந்த கிராமத்திற்கு தேவையான நீரை சில நிமிடங்களில் சுலபமாக எடுத்துவந்தான் சோமு. மக்கள் எல்லோரும் இப்போது சோமுவை பாராட்டினர்.

         சோமு தன் கனவு வாழ்க்கையை வாழ தொடங்கினான். ராமு இப்போது சோமுவிடம் வேலை செய்கின்றான். ராமுவின் மகன் ராமுவிடம் ஏன் அப்பா நீங்கள் சோமு மாமா போல் இல்லை?’ என்று கேட்டான். நீங்கள்  சொல்லுங்கள் அதற்கான பதிலை!!. இந்த கதையில் வரும் இருவருமே உழைப்பாளிகள்தான். ஆனால் சோமு புத்திசாலியான உழைப்பாளி. நோக்கம் இல்லாத ராமுவின் உழைப்பு பயனற்றுப் போனது. தவறான பாதையில் நீங்கள் எவ்வளவு வேகமாக ஒடினாலும் பயனில்லைஎன்பார்கள். இங்கு கடின உழைப்பு மட்டும் போதாது புத்திசாலிதனமும் வேண்டும்.

                                செயலற்ற வருமானத்திற்கும் நிதி சுதந்திரத்திற்காகவும் சொல்லப்படும் இக்கதையில் வரும் ராமுவைப் போல் இங்கு பலரை நாம் பார்க்;கின்றோம். அதுவும் திறமையாகவும் கடினமாகவும் உழைக்கும் மக்கள் நிறைய பேர் இங்கு உண்டு. அதேபோல் சோமுவைப் போன்றவர்களும் உண்டு. எங்கள் ஊரில் நாங்கள் வசிக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஓர் அண்ணன் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவருக்கு சொந்தமான சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் அவரை அப்படி வாழ வைக்கின்றது. உதாரணமாக இரண்டு கட்டிடங்களில் உள்ள வங்கி, அலுவலகம் என இவற்றில் இருந்து வரும் வருமானம் மாதம் ஒரு லட்சத்தை தாண்டும்.

                                வெளிநாடு சென்று சம்பாதித்து பிறகும் இங்கு வந்து கஷ்டப்படுபவர்கள் பலர் உண்டு. ஆனால் வெளிநாடு சென்று கடினமாக உழைத்துவிட்டு இங்கு வந்த ஒருவர் இப்போது விவசாயம் பார்க்கின்றார். அது அவருக்கு பொழுதுபோக்குத்தான் பொதுநலச் சேவைதான் அவருடைய வேலை. ஒரு கார் வைத்துக் கொண்டு கிராமத்தில் அவர் செய்யும் செலவுக்கு அதிகமான வருமானம் அவரிடம் இருக்கும் தென்னை மரங்களே தரும். இவர்களின் வாழ்க்கையை நிதி சுதந்திர வாழ்க்கை என்று சொல்லலாம். இது சோம்பேறித்தனம் அல்ல அறிவாளிக்கும் முட்டாளுக்கும் உள்ள வேறுபாடு. அதேபோல் இது சுயநலமும் இல்லை நாற்பது வருடமாக ஒரே வேலையை பிடித்துக் கொண்டு யாருக்கும் வழிவிடாமல் இருப்பதை விட இந்த வாழ்க்கை மேலானது.


                “உங்கள் உண்மையான செல்வம் என்பது உங்களின் நேரமும் சுதந்திரமும் தான்அதை விற்றுத்தான் நாம் பணம் ஈட்டுவதாக மைக் மெலோனி (Mike Maloney) என்பவர் தன் பணத்தின் மறைக்கப்பட்ட ரகசியம்(Hidden Secrets of Money) என்ற பதிவில் கூறுகின்றார். நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவையே அடிப்படையானது. முதலில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சிந்தனை செய்யுங்கள், உங்கள் சுதந்திரம் மற்றும் வாழ்க்கையைப்பற்றி சிந்தனை செய்யுங்கள் பிறகு அதற்கு இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். என் குடும்பம் ஏழை, பணம் இல்லை, படிப்பில்லை, உதவ யாரும் இல்லை என்று காரணம் தேட வேண்டாம். இவை எதுவுமே தேவை இல்லை. நிதி சுதந்திரத்திற்கு தேவை வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும் நிதிக்கல்வியும் தான்… (தொடரும்).

Friday 8 April 2016

Financial Freedom Introduction Post:3 (Tamil)

Be Wealthy

போதுமான தனிப்பட்ட செல்வம்

                சுதந்திரம் என்பது ஆன்மாவின் ஆக்ஸிஜன் (பிராண வாயு) என்கின்றார் மோஷே தயான் (Moshe Dayan). நிதி சுதந்திரம் பிற எல்லா சுதந்திரம் அதாவது கால சுதந்திரம் (Time Freedom), ஆரோக்கிய சுதந்திரம் (Health Freedom), உணர்வு சுதந்திரம் (Emotional Freedom), என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது. நிதி சுதந்திரத்திற்கு நிறைய வரையறைகளும் விளக்கங்களும் இருந்தாலும். அதை நான்கு வரிகளில் தெளிவுபடுத்தலாம்.
1. போதுமான தனிப்பட்ட செல்வம்
2. வாழ்க்கையை கொண்டாடும் மனோநிலை
3. தீவிரமான வேலையை சாராதிருத்தல்
4. போதுமான வருமானம்

 இவற்றைக் கொண்டுள்ள ஒருவரை நிதி சுதந்திரம் அடைந்தவர் என்று அழைக்கலாம். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


போதுமான தனிப்பட்ட செல்வம்

                                த்தனைக் கோடி இன்பம் வைத்தாய்என்று பாரதியை போல் வறுமையிலும் பாடும் நெஞ்சுரம் நம்மில் எத்தனைப் பேருக்கு உண்டு?. இயல்பை மீறி எண்ணங்களை ஓட செய்வது நல்லதுதான். என்றாலும் அந்த எண்ணம் நம்மை நாமே ஏமாற்றுவதாக இருந்துவிடக் கூடாது. வறுமையை ஒழிக்க வேண்டும். "கொடிது கொடிது வறுமை கொடிது என்பார் ஒளவைப்பாட்டி. வறுமை வந்தால் அழகு, செல்வம், நல்ல மனம், குணம், பெருமை என எல்லாம் கேடும் என்கின்றார் அருணகிரி நாதர்.

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம்இலா அயில்வேல் அரசே

மிடி என்றுஒரு பாவி வெளிப்படினே

                                பொருளைத் தேடி சேர்ப்பதே நல்லது. அதுவும் செல்வத்தை நிரம்ப ஈட்டுக பகைவரின் வீராப்பை அறுத்து ஒழிக்கும் எஃகு அதனைப் போல் கூர்மையானது வேறெதுவும் இல்லை என்று வள்ளுவர் பெரும்தகை குறிப்பிடுகின்றார்.

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
 எஃகுஅதனிற் கூரியது இல்

                         செல்வம் உட்பகையான ஏழ்மை, பொறாமை, வஞ்சம் என எல்லா பகைக்கும் எதிரானது. இப்பகைகள் நமது எண்ணங்களை முதலில் பாதிக்கின்றன பிறகு வாழ்க்கையையும் பாதிக்கின்றன. உலகில் தனிப்பட்ட செல்வநிலையைக் கொண்டு மக்களின் வாழ்க்கை முறையை நான்காக பிரிக்கலாம். 1. போராட்டம் 2. பிழைப்பு 3. வாழ்தல் 4. கொண்டாடுதல்

1.போராட்டமான வாழ்க்கை
     
                           ‘வாழ்க்கையே ஓர் போர்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்என்ற வாக்கியம் இவர்களுடையதுதான். வாழ்க்கை என்பது போராட்டமில்லை. அந்த எண்ணத்தை கைவிடுங்கள். இவர்களில் சிலரை தவிர பிறர் எல்லாரும் தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைக்கு காரணம் இவர்களின் எண்ணமும் செயலும்தான். அடிப்படை நிதி கல்வி அறிவு இல்லாதவர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்பவர்கள். கடனில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை தானே அழித்து கொள்பவர்கள் இதில் அடங்கும்.
                பலரின் வாழ்க்கை வெறும் கடனிலேயே முடிந்துவிடுகின்றது சிலருக்கு வாழ்க்கையே கடனால் முடிந்துவிடுகின்றது. உங்கள் வாழ்க்கை போராட்டமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள்தான் வேறு ஒருவரும் இல்லை. இதை மாற்றமுடியும், "உங்கள் எண்ணம் மற்றும் செயல்களை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும்" என்கின்றார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஐயா.

2. பிழைப்பு
                              தங்களை தாங்களே முடக்கிக்கொள்ளும் இவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தன் வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வாழும் ஓர் இயந்திரத்தனமான வாழ்க்கை. இவர்களில் பலர் போராடும் வாழ்க்கையின் விளிம்பில்தான் உள்ளனர். ஒருசிறு நிகழ்வு இவர்களை போராட்டத்திற்குள் தள்ளிவிடலாம்.
                                அறியாமையால் இவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு இவர்களை வாழவிடுவதும் இல்லை. மேலும் சிலர் முக்கியமான சில முடிவுகளை எடுக்காமல் தள்ளிப்போடுவதும், நமக்கு வாய்த்தது இவ்வளவு தான் என்றும் இருந்து விடுகின்றனர். இவர்களுக்கு அரிஸ்டாட்டில் கூறும் அறிவுரை விவேகம் என்பது பாதுகாப்பான இன்பமல்ல மாறாக வலிகளை தவிர்ப்பது”.

3. வாழ்தல்
                              வாழ்தல் என்பது வேறு, உயிரோடு இருத்தல் என்பது வேறு, வாழ்தல் என்பதை தன்னிறைவு பெற்றிருத்தல் என்றும் கூறலாம். தன்னிறைவு என்பது பொருளாதாரம், ஆரோக்கியம், உணர்வு, சமூகம், கல்வி என எல்லாவற்றிலும் தன்னிறைவை பெற்றிருத்தல். ஆனால் மக்களிடையே பற்றாக்குறையும், பற்றாக்குறை உணர்வும்தான் உள்ளது. ஒரு சிலரே வாழ்க்கையை வாழ்கின்றனர் எனலாம். இவர்களையும் அறுபது வயதில்தான் பார்க்க முடிகின்றது. அறுபது வயதில் உள்ளவர் வாழ்கின்றோம்என்று கூறி என்ன பயன்  குறைந்தது நாற்பது வயதுள்ளவர் அல்லவா சொல்ல வேண்டும்.
                                வாழ்க்கை என்பது தினம் தினம் புது புது அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு பலரின் வாழ்க்கை ஒரு சின்ன அறைக்குள்ளாகவே முடங்கி விடுகின்றது. பொருளாதார தன்னிறைவுக்கே நாம் வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்றோம். தனக்கும் தனது மகிழ்ச்கியான வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று தெரியாமல் மக்கள் பணத்தை விரட்டிக்கொண்டுதான் உள்ளனர். வாழ்க்கை என்பது இதைத்தவிர வேறு என்ன?” என்று தனது தற்போதைய நிலைதான் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறும் மனிதர்கள் பலர். இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையே இவர்களை கஷ்டப்படுத்துகின்றது என்று அறியாத இவர்களுக்கு ஜேம்ஸ் ஆலன் (James Allen) அவர்களின் அறிவுரை உங்கள் வாழ்க்கையை குறித்து நீங்கள் எந்த மாதிரியான எண்ணங்களையும் மற்றும் நம்பிக்கைகளையும் கொண்டுள்ளீர்களோ அதுபோலதான் உங்கள் வாழ்க்கை அமையும்”.
           
                     வாழ்க்கையைப் பற்றியும் அதன் உன்னதத்தைப் பற்றியும் ஆன்மீகம் பேசினாலும் அவை எல்லாம் பணத்திற்கு எதிரானவை. இதை ஆச்சாரியார் ரஜ்னீஷ் (Rajneesh) இந்த மதங்கள் எல்லாம் சொர்க்கத்தைப் பற்றி பேசிக்கொண்டு வாழ்க்கையை நரகமாக்குகின்றன. அதனால் இந்த வாழ்க்கையை வாழதேவைப்படும் பணத்தை இவை எதிர்க்கின்றனஎன்றார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் வாழ்க்கை ஓர் உயர் நல் மனித (High Well Being) வாழ்வாக அமையட்டும்.

4. கொண்டாட்டம்

                இது முழுக்க முழுக்க மனம் சார்ந்ததே! பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்க்கையைக் கொண்டாடும் மனம் வேண்டும். ஆனால் பணம் இல்லாமல் கொண்டாடுவதற்கும் பணத்தைக் கொண்டு கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கொண்டாட்டம் என்பது ஏன் பணத்தோடு இருக்க கூடாது?” என்று கேட்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki). வாழ்க்கை என்பது கொண்டாட்டமாகத்தான் இருக்க வேண்டும்என்கின்றார் ஓஷோ (Osho). இதனை தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா வாழ்க்கை என்பது உயிரோடு இருப்பதற்கு இல்லை, பிழைப்பதற்கு இல்லை, வாழ்வதற்கும் இல்லை, வாழ்க்கை என்பது கொண்டாடுவதற்கேஎன்றார். வாழ்க்கையை கொண்டாடும் வழிகளை தேடுங்கள்.  நான் தேடிக் கண்டுக்கொண்ட ஒரு வழிதான் நிதி சுதந்திரம்…(தொடரும்).

Thursday 7 April 2016

Financial Freedom Introduction Post 4 (Tamil)

Celebrating Mindset

வாழ்க்கையைக் கொண்டாடும் மனோநிலை

                                 புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. நிதி சுதந்திரத்தின் பெரும் பகுதி, இது என்னடா வாழ்க்கை?’, என்ற எண்ணம் தோன்றாமல் உங்கள் இதயமும் மனமும் அமைதியாக இருப்பதேஎன்று அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகர் சுஸே ஓர்மன் (Suze Orman) குறிப்பிடுகின்றார். ஒரு குழந்தை நாளொன்றுக்கு இருநூறு முறை சிரிக்கின்றதாம்.  வயதாக ஆக இந்த எண்ணிக்கை  குறைகின்றதாம்.  ஒரு பொம்மையை குழந்தையிடம் காட்டினால் அக்குழந்தை சிரிக்கும் அது ஒன்றும் நகைச்சுவையல்ல, இதையே ஒரு பெரியவரிடம் செய்தால் கோபப்படுவார்.  எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டார் பாருங்கள்என்று தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா கூறுகின்றார். குழந்தையிடம் எந்த தன் முனைப்பும் (EGO) இல்லை.  தன்முனைப்பு தான் நமது ஆனந்தத்தை மறைக்கின்றது  என்று நமது மெய்ஞ்ஞான நூல்கள் குறிப்பிடுகின்றது.

                நமது ஆனந்தத்திற்கு நகைச்சுவையோ அல்லது கஞ்சாவில் உள்ள ஆனந்தமைடோ (Anandamide) தேவை இல்லை. நமது இயல்பே மகிழ்ச்சிதான். அப்படியிருந்தும் நம் தன்முனைப்பானது நமது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம், மதிப்பு, பதவி என எதையாவது ஒன்றை சார்ந்துள்ளது. அதற்காக நாம் செய்யும் செயல்கள் நம்மை சில நேரம் இன்பத்திலும், சில நேரம் துன்பத்திலும் உட்படுத்துகின்றன. அதேபோல், குழந்தையிடம் எந்த நிகழ்வைப் பற்றிய அக்கறையும்  இல்லை.  ஆனால் நம்மிடமோ நடந்த மற்றும் நடக்க இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையாக உள்ளது. இந்த சிந்தனையால்  தான் நமது தற்போதைய மகிழ்ச்சி சிறைப்பட்டுள்ளது.     இதை வேறு விதமாக கூறவேண்டும் என்றால் நமது மகிழ்ச்சி என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை பொறுத்துதான் உள்ளது.
             
              நிகழ்வுகளை பொது நிகழ்வுகள் என்றும், தனிப்பட்ட நிகழ்வுகள் என்றும் இரண்டாக பிரிக்கலாம்.  பொதுநிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் அவை நம்மை பாதிக்க நாம்தான் அனுமதிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பெட்ரோல் விலையேற்றம் சைக்கிளில் செல்பவர்களையும், பெறும் பணக்காரர்களையும் பாதிப்பதில்லை.  பொதுநிகழ்வு என்றாலும் அதனை மதிப்பிடுவதும் அல்லது ஏற்றுக்கொள்ளுவதும் ஒருவருடைய தனிப்பட்ட விசயம் அல்லது தனிபட்ட நிகழ்வே எனலாம்.
  “இந்த தொழில்நுட்ப காலத்தில் மனிதன் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டான், அமெரிக்காவில் என்ன நடந்தாலும் தெரிகின்றது ஆனால் பக்கத்துவிட்டில் உள்ளவரை தெரியவில்லைஎன்று ஒருமுறை முனைவர் கு. ஞானசம்பந்தம் ஐயா கூறினார்.  கிரேசி மோகன் அவர்கள் சொல்வதைப்போல் இப்போதெல்லாம் கனவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே கூட்டு குடும்பம் என்ற நிலையில் உள்ளோம்.  இங்கு எல்லா நிகழ்வுகளுமே தனிப்பட்ட நிகழ்வுகள் ஆகிவிட்டன.  இவையே நமது மகிழ்ச்சியை தீர்மானிக்கின்றன.  இந்த தனிப்பட்ட நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றாலும்ää  நாமே நமது கட்டுபாட்டில் இல்லாதபோது இந்த நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது அசாத்தியமான ஒன்று.

            நமது கட்டுப்பாட்டு மையம் நமது மனம் தான். நிகழ்வுகள் நமது மகிழ்ச்சியை பாதிக்கின்றன அதேசமயத்தில் நமது மனோநிலையைப் பொறுத்துதான் நமது மகிழ்ச்சியும் அமையும். ஒரே மாதிரியான நிகழ்வுகளே நமக்கு சில நேரம் மகிழ்ச்சியையும் சிலநேரம் துயரத்தையும் தந்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு காதல் ஜோடி பூங்கா ஒன்றில் உலாவிக்கொண்டு இருந்தனர். அப்போது பூங்காவில் இருந்த கல் ஒன்றில் அப்பெண் தடுக்கி விழுந்துவிட்டாள். உடனே அந்த காதலன் பதறிப்போய் அந்த பெண்னை தூக்கிவிட்டுவிட்டு தடுக்கிய கல்லை பார்த்து சனியன் பிடித்த கல்லேஎன்று கோபப்பட்டான். இருவரும் கல்யாணம் செய்துகொண்டு சில வருடங்களுக்கு பிறகு அதே பூங்காவில் உலாவிக்கொண்டு இருந்தனர் மீண்டும் அதே கல் தடுக்கி அப்பெண் விழுந்தாள். எந்த பதட்டமும் இன்றி திரும்பிய காதலன் (இப்போது கணவன்) பெண்னைப் பார்த்து சனியனே பார்த்து வரமாட்டாயா?” என்றான். இதுதான் சனிப்பெயர்ச்சி என்று மனதின் மாறுபாட்டுக்கு சுகி.சுவம் ஐயா கூறும் கதை இது.
        
       நமது மகிழ்ச்சி மனோநிலையை பொறுத்தது. மனமோ தொடர் மாறுதலுக்கு உட்பட்டது. ஒரு தத்துவ புத்தகத்தை படித்துவிட்டு ஓர் ஆண்டுக்கு பிறகு அதே புத்தகத்தை நாம் படித்தால் மீண்டும் புதிதாக உணரலாம், காரணம் நமது மனோநிலை மாற்றமே. தொடர்ந்து மாறும் இந்த மனோநிலையும் பெரும்பாலும் நமது மனப்பான்மை அல்லது மனப்போக்கு (Attitude) மற்றும் பழக்கம் (Habit) சார்ந்துதான் இருக்கும். நமது இப்போதைய மனோநிலை வெளிமனதில் இருந்தும் மனப்போக்கு மற்றும் பழக்கம் இவை ஆழ்மனதில் இருந்தும் இயங்குகின்றது அறிவியல் கூறுகின்றன. தள்ளிப்போடுவது நமது மனப்போக்கு என்றால் அது நமது எல்லா விசயத்திலும் பிரதிபலிக்கும், நேர்மறை சிந்தனை நமது மனப்போக்கு என்றால் அதுவும் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.
             செல்வம் மற்றும் பணம் இவற்றில் நமது மனோநிலை அல்லது மனப்போக்கு எப்படி உள்ளதோ அதைப்பொறுத்துதான் பெரும்பாலும் நமது; வாழ்க்கையின் மகிழ்ச்சி; அமையும்.  பணம் இல்லாதவரின் கொண்டாட்டம் பகலில் எரியும் விளக்குப்போல்தான். பெரும் பணம் படைத்த பலரும்; மகிழ்ச்சியாக இல்லை என்பதும் எதார்த்தம். பணத்தை மையமாகக்கொண்டு நமது மனப்போக்கை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பணத்தின் பின் ஓடும் மனோநிலை/மனப்போக்கு, மற்றொன்று இருக்கும் பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் மனோநிலை/மனப்போக்கு.
              உங்களிடம் என்ன மனப்போக்கு உள்ளது?. உங்களின் நேரம் எதற்காக அதிகம் செலவிடப்படுகின்றது பணத்திற்;காகவா? அல்லது மகிழ்ச்சிக்காகவா? சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள் எதற்காக நீங்கள் அதிகம் செலவிடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் மனப்போக்கு அமையும். திரைப்படங்களில் காட்டப்படுவது போல் பணக்காரன் கவலையுலும் அல்லது மன இறுக்கத்திலும் (Tension) உள்ளான் என்பதும், ஏழை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளான் என்பதும் பொய்.  நீங்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எந்த மனோநிலையில் உள்ளீர்கள் என்பதே முக்கியம். பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் மனப்போக்குதான் உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்.  பணத்தின் பின் ஓடும் ஒரு மனதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

              பணம் வேண்டாம் என்றோ அல்லது தேவையில்லை என்றோ இதற்கு அர்த்தமில்லை.  பணம் மிக முக்கியமான ஒன்றுதான்.  ஆனால் பணத்தின் பின் ஓடினால் பணம் வராது. கடின உழைப்பு, பிறகு வெற்றி, பிறகுதான் மகிழ்ச்சி என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் நீங்கள் மகிழச்சியாக  இருந்தால்தான் உங்களால் நன்றாக உழைக்க முடியும் என்றும் யார் மகிழ்ச்சியாகவும் நன்றிவுணர்வுடனும் உள்ளார்களோ அவர்களிடமே பணம் குவிகின்றது என்றும் நவீன ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதனால் நீங்கள் தேடவேண்டியது மகிழ்ச்சிக்கான வழியைத்தான். உங்கள் தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள் அதற்காக நன்றியுணர்வுடன் இருங்கள்.

                “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுஎன்ற கண்ணதாசன் அவர்கள் வரியை நினைவில் வையுங்கள். மனநிம்மதியே மிக சிறந்த செல்வம் நிம்மதி அற்ற மனதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.  மகிழ்ச்சிதான் மிக பெரிய வெற்றி. அதனால் ஓவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு எது மகிழ்ச்சியை தருகின்றதோ அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடும் மனோநிலைக்கே பணம் வசப்படும்… (தொடரும்).